வி ம ர் ச ன ம் • தேனி கண்ணன்



படத்தின் ஆரம்பத்திலேயே நாயகன் அஜய்யும், நாயகி ரென்யாவும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களது திருமணத்திற்கு நாயகியின் வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும், நாயகனுடைய வீட்டில் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.   திருமணம் முடிந்து வீடு திரும்பும் நாயகனுக்கும், நாயகிக்கும் முதல் இரவு நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாயகனுடைய வீட்டில் உள்ளவர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.  இருவரை மட்டும் அந்த வீட்டில் தங்க வைத்துவிட்டு, குடும்பத்தினர் அனைவரும் வேறு வீட்டுக்கு சென்றுவிடுகின்றனர்.    குடும்பத்தினர் சென்ற சில நிமிடங்களில் நாயகனுடைய நண்பர்கள் அவரது வீட்டிற்கு வந்து பார்ட்டி கொண்டாட நாயகனை அழைக்கின்றனர். நாயகனும், நாயகியின் சம்மதத்தின் பேரில் அந்த வீட்டிலுள்ள மற்றொரு அறையில் நடைபெறும் பார்ட்டியில் கலந்து கொண்டு, வெகுநேரம் கழித்து அறைக்கு திரும்புகிறார். பின்னர் களைப்புடன் கட்டிலில் படுத்து தூங்கி விடுகிறார். மறுநாள் விழித்து பார்க்கும்போது ரென்யா மர்மமான முறையில் இறந்து கிடக்கிறாள். அவளது சாவுக்கு காரணம் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள்தான் என்று நினைத்து போலீஸ் அவர்களை விசாரிக்கிறது. ஆனால், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவள் மாரடைப்பால் இறந்துபோனாள் என்று தெரிய வந்ததும் இவர்களை விடுவிக்கிறது. காதலியுடன் ஒருநாள்கூட வாழமுடியாத வேதனையில் ஆழ்ந்து கிடக்கிறார் நாயகன். இந்த நிலையில், அந்த வீட்டில் அமானுஷ்ய சக்தி ஒன்று நாயகனை ஆட்டிப்படைக்கிறது. இதை உணரும் நாயகனின் குடும்பத்தார் அனைவரும் அந்த வீட்டை விட்டு வெளியேறி, வெளியே தங்குகின்றனர்.  ஆனால், நாயகன் மட்டும் அங்கேயே தங்குகிறார். அந்த வீட்டில் தனது மனைவி தான் அமானுஷ்ய சக்தியாக உலாவுகிறாள் என்று நினைத்து ஒரு விஞ்ஞானியை சந்தித்து விளக்கம் கேட்கிறான் நாயகன். அதற்கடுத்த நாள் அந்த விஞ்ஞானியும் மர்மமான முறையில் இறந்து போகிறார். இதனால், போலீசின் சந்தேகப் பார்வை நாயகன் மீது விழுகிறது. ஆனால், நாயகனை கைது செய்யப் போதுமான ஆதாரங்கள் இல்லை. இந்நிலையில், நாயகனின் வீட்டிற்கு வந்து தங்கும் நாயகனின் சகோதரியும், மர்மமான முறையில் இறந்து போகிறாள். இதற்கும் ஆவி தான் காரணமா என்று குழம்புகிறார் ஹீரோ. திகில் படத்தை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்போடு உட்கார்ந்தால் இடைவேளைக்குப்பிறகு வழக்கமான திகில் படத்திற்கு உள்ள சம்பிரதாயத்தோடு முடித்து விட்டார்கள். ஆவிகள் உலவும் உலகத்திற்குள் ஹீரோ போகும் அந்த நிமிடங்களில் திக் திக் என்று கண் கொட்டாமல் பார்க்க வைக்கிறார் இயக்குனர் பிரபு யுவராஜ்.  ஆனால் ஆவிகள் இருக்கிறதா இல்லையா என்பதில் அவரும் குழம்பி ரசிகர்களையும் குழப்பியிருக்கிறார். இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலைசெய்யப்பட்டால் பிறகு வீட்டில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் எதனால் ஏற்படுகிறது. இறந்து போன ரென்யா ஆவி ஹீரோவை நேசிக்கிறதா இல்லையா. அந்த ஆவிகள் ஆராய்ச்சியாளர் ஏன் இறக்கிறார், இப்படி பல கேள்விகளுக்கு பதிலே இல்லாமல் படத்தை முடித்திருக்கிறார்கள். ஆனால் வழக்கமான திகில் படமாக இல்லாமல் காட்டவேண்டும் என்ற முயற்சியில் பாதிதான் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவில் ஒன்றும் குறையில்லை. ராஜ் ஆர்யன் இசையில் சத்தம் அதிகமாக இருக்கிறது.   மொத்தத்தில், திகில் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்து.

Labels: